வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறை தனியார் பள்ளி ஒன்றில் 4ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பள்ளியின் அறங்காவலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் மாணவி ஒருவர் ஆசிரியர்களால் பலாத்காரம் செய்யப்பட்டார். சென்னை கிளாம்பாக்கத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம், சேலத்தில் பள்ளி மாணவி பலாத்காரம் என தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் நேற்று அரசுப் பேருந்து ஒன்றில் பள்ளி மாணவிக்கு மாணவன் ஒருவன், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த பேருந்து ஓட்டுநர் மாணவனை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, அந்த மாணவன் ஓட்டுநரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மற்ற மாணவர்களை டிரைவரும், பொதுமக்களும் சுற்றிவளைத்து கேள்வி எழுப்பி தப்பியோடிய மாணவனை ’வர சொல்’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.