கோவையில் ஏசி கேஸ் கசிவால் மயக்கமடைந்த 30-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள நட்சத்திர உணவு விடுதிகளுக்கு பேக்கரி உணவுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வெளிமாநிலத்தைச் சேர்ந்த பணியாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தான், தொழிலாளர்கள் பணியில் இருந்த போது அங்கிருந்த ஏசியில் இருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. இது அறை முழுவதும் பரவியுள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு தலைச்சுற்றி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதில், பல பணியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பணியாளர்களை மீட்டு 10 ஆம்புலன்ஸ்கள் மூலம் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து சூலூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து ஏசி கசிவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.