நெய்வேலியில் செயல்படும் சுரங்கங்கள், அனல் மின் நிலையங்களால் நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ எனும் ஆய்வறிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெளியிட்டது. அதில், கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிலக்கரி சுரங்கம், அனல் மின் நிலையம் பகுதிகளில் 121 வீடுகள் மற்றும் 37 இடங்களில் மண் மற்றும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் ‘மின்சாரத்தின் இருண்ட முகம்’ என்ற பெயரில் ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்டன.
அந்த ஆய்வறிக்கையில் வடக்குவெள்ளூர், தொல்காப்பியர் நகரில் குடிப்பதற்காகவும், வீட்டுத் தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரில் 250 மடங்கு பாதரசம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெள்ளாளன்குளம் பகுதியில் 30 மடங்கு துத்தநாகமும், 29 மடங்கு செம்பு, 28 மடங்கு நிக்கல் ஆகியவை தண்ணீரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தண்ணீரில், ஃப்ளோரைடு, இரும்பு, கால்சியம், மெக்னீசியம், சிலிகான் போன்றவற்றின் விகிதமும் அதிகரித்திருப்பதால் குடிக்க உகந்தது இல்லை என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
என்.எல்.சி.யைச் சுற்றி ஆய்வு செய்யப்பட்ட 31 இடங்களில் 17 இடங்கள் மிகக் கடுமையாக மாசடைந்திருந்தது. 11 இடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் மாசடைந்திருந்தது. 101 வீடுகளில் நடத்தப்பட்ட நேர்காணல் முறையிலான ஆய்வில் 89 வீடுகளில் வீட்டில் யாரோ ஒருவருக்கு சிறுநீரகம், தோல் அல்லது மூச்சுத் திணறல் சார்ந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது. பரங்கிப்பேட்டையில் ஐ.டி.பி.சி.எல் நடத்தி வரும் அனல்மின் நிலையத்திற்கு அருகில் 2 கிராமங்களில் 6 இடங்களில் எடுக்கப்பட்ட நீர், மண் மாதிரிகளில் மூன்று இடங்கள் தீவிரமான மாசடைந்துள்ளன.
இதனால் அப்பகுதிகளில் வசிப்போருக்கு நரம்பு மண்டல பாதிப்பு, செரிமான பிரச்சனை, சிறுநீரக பாதிப்பு, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டிருக்கிறது. மேலும், விவசாய நிலம், குடிநீர் ஆதாரங்களில் அனல் மின் நிலைய கழிவுகள் சேர்ந்திருப்பதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.