பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கார் ஓட்டுநருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நர்சரி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக ரஜினிகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஓட்டுநர் ரஜினி குமார், பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளன். இந்நிலையில், அதே பள்ளியில் அமைந்துள்ள ஆய்வகம் ஒன்றில் 4 வயது எல்கேஜி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதையும், கடந்த இரண்டு மாதங்களாக அவள் மனமுடைந்து அடிக்கடி அழுது கொண்டிருப்பதையும் கவனித்த பிறகு தான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, நடந்தவற்றை சிறுமி தனது தாயிடம் கூறியுள்ளார். மறுநாள் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, சிறுமி குற்றம் செய்தவரை சுட்டிக்காட்டினார். அதைத் தொடர்ந்து பெற்றோர், பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இன்று காலை பள்ளிக்கு வந்த சிறுமியின் பெற்றோர் ஓட்டுநர் ரஜினிகுமாரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட ரஜினிகுமார் மீது ஐபிசி பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மற்ற பெற்றோர்களும் ரஜினி குறித்து முதல்வரிடம் புகார் அளித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என தற்போது விசாரணை நடத்தபட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.