கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் நகரின் உள்பகுதியில் இயங்கும் மதுக்கடைகளுக்கு டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகைத் தீப திருவிழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் திருவண்ணாமலையில் குவிவார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்ற விழா இம்மாதம் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. நவம்பர் 30ஆம் தேதி வெள்ளி கற்பகவிருட்சம், வெள்ளி காமதேனு வாகனத்தில் உண்ணாமலை அம்மையுடன், அண்ணாமலையார் உலா வந்து அருள்பாலிப்பார். டிச.1ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்திலும், டிச.2ஆம் தேதி வெள்ளி ரதத்திலும் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற உள்ளது. டிசம்பர் 3ஆம் தேதி காலை 5.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் எழுந்தருள மகா ரத ஊர்வலம் நடைபெற உள்ளது. டிச.6ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. அன்று மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை நகரில் காமராஜர் சிலை அருகே இயங்கும் டாஸ்மாக் கடை, வேங்கிக்கால் ஏரிக்கரை, புறவழிசாலையில் உள்ள கடை, நல்லவன்பாளையம் மற்றும் திருவண்ணாமலை நகரின் உள்பகுதியில் இயங்கும் மதுக்கடைகளுடன் இணைந்த ஹோட்டல்களான திரிசூல், நளா, அஷ்ரேய்யா, அருணாச்சலா, வேங்கிக்கால் பகுதியில் இயங்கி வரும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி மதுக்கடைகள் ஆகிய அனைத்திற்கும் டிசம்பர் 2ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு தொடர்ந்து மூட அம்மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.