இந்த ஆண்டு அனைத்து திட்டங்களிலும் மொபைல் டேட்டா மற்றும் கால் கட்டணங்களை உயர்த்த உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்..
இந்தியாவில் ப்ரீபெய்ட் சிம் கார்டுகளை பயன்படுத்தும் பயனர்கள் மாதாந்திரம் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அவுட்கோயிங் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்… மேலும் பேலன்ஸ் இருந்தால் தான் இன்கமிங் கால்களும் வரும்.. எனவே பயனர்கள் ஒவ்வொரு மாதமும் கட்டாயம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.. ரீசார்ஜ் கட்டணம் ஒவ்வொரு தொலைதொர்பு நிறுவனத்திற்கு ஏற்ப மாறுபடும்.. அந்த வகையில் இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ள ஏர்டெல் நிறுவனம் குறைந்தபட்ச ப்ரீபெய்டு கட்டணத்தை கடந்த மாதம் உயர்த்தியது.. அதன்படி ரூ.99-ஆக இருந்த குறைந்தபட்ச மாதாந்திர ரீசார்ஜ் கட்டணம், தற்போது ரூ.155-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.. .
இந்நிலையில், இந்த ஆண்டு அனைத்து திட்டங்களிலும் மொபைல் போன் அழைப்பு மற்றும் டேட்டா கட்டணங்களை உயர்த்த உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் பார்தி மிட்டல் தெரிவித்துள்ளார்.. தொலைத்தொடர்பு வணிகத்தில் மூலதனத்தின் மீதான வருமானம் மிகவும் குறைவாக இருப்பதாகவும், இந்த ஆண்டு கட்டண உயர்வு எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அவர் “ ஏர்டெல் நிறுவனம் நிறைய மூலதனத்தை செலுத்தியுள்ளது, இது இருப்புநிலைக் குறிப்பை வலுப்படுத்தியுள்ளது, ஆனால் தொழில்துறையில் மூலதனத்தின் வருவாய் மிகவும் குறைவாக உள்ளது. அது மாற வேண்டும். இந்தியாவில் இந்த ஆண்டு, அனைத்து திட்டங்களிலும் கட்டண உயர்வு இருக்கும்,” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர் “சம்பளங்கள் உயர்ந்துவிட்டன, வாடகை ஏறிவிட்டது.. ஒரு விஷயத்தைத் தவிர. யாரும் குறை சொல்லவில்லை. மக்கள் கிட்டத்தட்ட பெரியளவில் பணம் கொடுக்காமல் 30 ஜிபியை பயன்படுத்துகின்றனர்.. நாட்டில் ஒரு வலுவான தொலைத்தொடர்பு நிறுவனம் தேவை. இந்தியாவின் கனவு டிஜிட்டல், பொருளாதார வளர்ச்சி முழுமையாக நனவாகியுள்ளது. அரசாங்கம் முழு விழிப்புணர்வோடு இருக்கிறது.. மக்களும் மிகவும் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்,” என்று மிட்டல் கூறினார்.
பொருளாதார ரீதியாக, இந்தியப் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளும் இந்த நேரத்தில் அரசாங்கத்திடமிருந்து, முதலீட்டாளர்களிடமிருந்து அதிக கவனத்தைப் பெறுகின்றன. பணவீக்கம் நியாயமான முறையில் இப்போது சரிபார்க்கப்படுகிறது. இந்தியாவின் முழுக் கவனமும் இந்தப் பொருளாதாரத்தில்தான் உள்ளது என்று நான் நினைக்கிறேன்.
குறிப்பாக டிஜிட்டல் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்துவதால் இந்தியாவுக்கு நிறைய நன்மைகள் கிடைத்து வருகின்றன.. ஏர்டெல் நிறுவனத்தில் இப்போது சுமார் 100 மில்லியன் 2ஜி வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளனர்.. ஆனால் வாடிக்கையாளர் தளம் 4ஜி அல்லது 5ஜிக்கு மாறும் வரை நிறுவனம் 2ஜி சேவைகளை நிறுத்தாது..” என்று தெரிவித்தார்…