Sudan: சூடானில் பயங்கரவாதிகளின் பாலியல் பலாத்கார கொடுமைகளுக்கு பயந்து, 130க்கும் மேற்பட்ட பெண்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
வட ஆப்ரிக்க நாடான சூடானில், ராணுவ ஆட்சி நடக்கிறது. எஸ்.ஏ.எப்., என்றழைக்கப்படும், சூடான் ஆயுதப்படைக்கு அப்தெல் பத்தா அல் – புர்ஹான் என்பவர் தலைமை வகிக்கிறார். இவரது படைக்கும், ஆர்.எஸ்.எப்., என்றழைக்கப்படும், ‘ரேபிட் சப்போர்ட் போர்சஸ்’ எனும் பயங்கரவாத படைக்கும் இடையே 2023ல் போர் துவங்கியது. ஆர்.எஸ்.எப்., பயங்கரவாத குழுவுக்கு பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்கள் ஆதரவு அளித்து வருகின்றன. தலைநகர் கார்தோம் மற்றும் தார்புர் பிராந்தியங்களை மையமாக வைத்து, இந்த சண்டை நடக்கிறது. கடந்தாண்டு செப்., நிலவரப்படி, 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்நாட்டுக்கு உள்ளேயே இடம் பெயர்ந்துள்ளனர். 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பிற நாடுகளில் அகதிகளாக குடியேறி உள்ளனர்.
இந்த போரால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, மனித உரிமை ஆர்வலர் ஹலா அல்கரிப் கூறியதாவது, மக்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகளை ஆர்.எஸ்.எப்., பயங்கரவாத குழு ஆயுதமாக பயன்படுத்துகிறது. இதனால், வார்த்தைகளில் விவரிக்க முடியாத கொடுமைகளை சூடான் பெண்கள் அனுபவித்து வருகின்றனர். உடல் ரீதியிலான சித்ரவதைகள் மட்டுமின்றி, கூட்டு பாலியல் பலாத்காரத்தால் பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். இதில் இருந்து தப்பிக்க 130க்கும் மேற்பட்ட பெண்கள் சூடானில் தற்கொலை செய்துள்ளனர். சூடானில் கடந்த 20 ஆண்டுகளாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தலை துாக்கியுள்ளன. குறிப்பாக, போர் துவங்கிய பின் அதன் தீவிரம் அதிகரித்துள்ள தாக சூடானுக்கான ஐ.நா., பணிக்குழு தெரிவித்துள்ளது.