PM Modi: இந்தியாவுக்குள் இருந்தும், வெளியில் இருந்தும் நாட்டை அழிக்க முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளைக் குறிவைத்து அரசியல் லாபத்துக்காக தேசத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் ‘நகர நக்சல்கள்’ என்று பேசியுள்ளார். சர்தார் வல்லபாய் படேலின் 149வது பிறந்தநாள் தினம் இன்று. 2014ம் ஆண்டு முதல் படேலின் பிறந்தநாள் தேச ஒற்றுமை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேச ஒற்றுமை தினம் தீபாவளியுடன் இணைந்து வந்துள்ளது.
சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிறகு பேசிய மோடி, “பல நாடுகள் பிரிந்து செல்லும் வேளையில், இந்தியா மேலும் ஒன்றிணைந்து வருகிறது. இது சாதாரண நிகழ்வு அல்ல, புதிய வரலாறு எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது. நாம் நமது பிரச்னைகளை எவ்வாறு தீர்த்துக்கொள்கிறோம் என்பதை உலகமே கவனித்து வருகிறது. அதனால் நாம் ஒற்றுமையுடன் இருக்கவேண்டியது அவசியம்” என்று பேசியிருந்தார்.
மேலும் அவர், “இந்தியாவுக்கு உள்ளும் வெளியிலும் சில மோசமான சக்திகள் இந்தியாவின் வளர்சியைப் பார்த்து கவலைகொள்கின்றனர். அவர்கள் உலகளாவிய முதலீட்டாளர்களிடம் தவறான கருத்துகளைக் கொண்டு சேர்க்கின்றனர். தவறான தகவல்களை பிரசாரம் செய்கின்றனர். மக்களை சாதிகளாக பிரித்து, இந்திய சமூகத்தின் ஒற்றுமையை கெடுக்க நினைக்கின்றனர். அவர்கள் இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கின்றனர். ஏனென்றால் ‘ஏழை இந்தியா, பலவீனமான இந்தியா’ என்ற அரசியல்தான் அவர்களுக்குப் பொருந்துகிறது. அவர்கள் அரசியலைப்பின் பெயரில் இந்தியாவைப் பிரிக்கின்றனர். நாம் இந்த நகர்ப்புற நக்சல் கூட்டணியை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக போராட வேண்டும்.” என்று மோடி பேசினார்.
Readmore: இல்லத்தரசிகளே அதிர்ச்சி!. சிலிண்டர் விலை உயர்ந்தது!. எவ்வளவு தெரியுமா?