தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்தார்.
இந்தியாவில், தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் 5 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்திபன் (55) என்பவர் உயிரிழந்தார். இவர் ஏற்கெனவே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் திருச்சியில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்தார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொதுமக்களிடையேயும் இது குறித்த விழிப்புணர்வு அவசியம். கூட்டமான இடங்களுக்கு செல்லும்போது தவறாமல் மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என்றும் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.