பேருந்து நிறுத்தத்தில் பள்ளி சீருடையில் உள்ள மாணவிக்கு, பாலிடெக்னிக் மாணவன் தாலி கட்டும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே காந்தி சிலை அமைந்துள்ளது. அதன் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பல்வேறு சிறு கிராமங்களுக்கு செல்வோர் இதனை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த பேருந்து நிழற்குடையில் பள்ளி சீருடையில் இருக்கும் மாணவிக்கு, மாணவர் ஒருவர் தாலிகட்டியுள்ளார். தனது நண்பர்கள் பூ போட்டு வாழ்த்த, அந்த மாணவன், மாணவியின் கழுத்தில் தாலி கட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான விசாரணையில், சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வெங்காய தலமேடு கிராமத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், மாணவிக்கு தாலி கட்டிய மாணவன் வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக்கில் படித்து வருவதும் தெரியவந்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், குழந்தைகளின் வாழ்க்கை குறித்த கேள்வி எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், உடனடியாக இதுபோன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையில் மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.