ஒடிசாவில் தோப்புக்கரணம் போடும்போது பள்ளி மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள ஓரலி பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 4ஆம் வகுப்பு பயின்று வந்த ருத்ர நாராயண் என்ற மாணவன், தனது நண்பர்கள் 4 பேருடன் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். பள்ளி வகுப்பு நேரத்தில் விளையாடிக் கொண்டிருந்ததால், அந்த மாணவர்களை ஆசிரியர் கண்டித்துள்ளார். மேலும், அதற்கு தண்டனையாக மாணவர்களை தோப்புக்கரணம் போட சொல்லியுள்ளார்.
இந்நிலையில், தோப்புக்கரணம் போடும்போது மாணவன் ருத்ர நாராயண் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவரின் பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தோப்புக்கரணம் போடும்போது மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.