ஈவிகேஎஸ் இளங்கோவன் மகனும், காங்கிரஸ் எம்.எல்.ஏ-வுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 46.
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். முன்னாள் மத்திய அமைச்சரான இவருக்கு திருமகன் ஈவெரா, சஞ்சய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், திருமகன் ஈவெரா தனது தந்தையை போல அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவர் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காங்கிரஸ் கட்சியில் துடிப்புடன் செயலாற்றி வந்த திருமகன் ஈவெராவுக்கு இன்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக KMCH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி திருமகன் ஈவெராவின் உயிர் பிரிந்தது. திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 67,300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட யுவராஜா 58,396 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தார். திருமகன் ஈவெரா மறைவை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.