குடிபோதையில் தனது 13 வயது மகளை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையை அடுத்த திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அந்த சிறுமிக்கு மாதவிடாய் பிரச்சனை இருந்துள்ளது. குறிப்பிட்ட சில மாதங்களாக மாதவிடாய் வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமியின் வயிறும் நாளுக்குநாள் பெரிதாகி கொண்டே இருந்தது. வயிற்றில் கட்டி இருக்குமோ என்ற பயத்தில் தனது மகளின் உடல்நிலையை கருத்தில்கொண்டு அந்த சிறுமியின் தாய், சிறுமியை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுத்து வருமாரு அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவர்கள் ஆலோசனைபடி, பரிசோதனை மேற்கொண்டதில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் உடனடியாக திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், சிறுமியின் தந்தையே போதையில் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் தந்தையை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்த காவல்துறையினர், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.