தவளை விழுந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திற்கு முருக பெருமானை தரிசிப்பதற்காக அன்புச்செல்வம் – ஜானகிஸ்ரீ தம்பதி தங்களது 3 பெண் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அப்போது அவர்களது குழந்தைகள் ஐஸ்கிரீம் வாங்கி தரச்சொல்லி கேட்டதால், தனியார் ஐஸ்கிரீம் கடையில், நித்ரா ஸ்ரீ, ரக்ஷனா ஸ்ரீ, தாரணி ஸ்ரீ ஆகிய 3 குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளனர்.
அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டபோது, அதில் தவளை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து 3 குழந்தைகளையும் சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அதன்பிறகு, குழந்தைகளின் பெற்றோர் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஐஸ்கிரீம் கடை மீது புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக சுகாதாரமற்ற முறையில் குளிர்சாதன பொருட்களை விற்பனை செய்து வந்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் துரைராஜ் மீது 273 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.