வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை துன்புறுத்தி கொலை செய்து வனப்பகுதிக்குள் புதைத்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் கங்ககொண்டனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்குமார் (25). இவருக்கும் சந்திரகலா (21) என்பவருக்கும் கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சந்திரகலாவின் தந்தை பால் வியாபாரம் செய்து வரும் ஏழை என்றாலும் திருமணதத்தின் போது மோகன்குமார் கேட்ட அனைத்து வரதட்சணை பொருட்கள் மற்றும் பணத்தை கொடுத்து தனது மகளின் திருமணத்தை விமர்சையாக நடத்தி உள்ளார். திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் சந்திரலேகா கர்ப்பமான நிலையில், மீண்டும் பணம் மற்றும் பொருட்களாக கூடுதல் வரதட்சணையை பெற்று வா என்று தனது மனைவியை மோகன்குமார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி உள்ளார்.
ஏழ்மையில் கடன் வாங்கி தனக்கு திருமணம் செய்து வைத்துள்ள தந்தைக்கு மீண்டும் சிரமம் கொடுக்க மனம் இல்லாத சந்திரலேகா, வரதட்சணை பணம் குறித்து தனது தந்தை மற்றும் தாயிடம் எதுவும் பேசாமல் கணவரின் கொடுமைகள் குறித்து தனது அக்காவிடம் மட்டும் தெரிவித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மோகன்குமார் 2 முறை வரதட்சணை பெறாமல் வீட்டிற்கு வர வேண்டாம் என தனது மனைவியை அவரது வீட்டிற்கு அடித்து துன்புறுத்தி அனுப்பியுள்ளார். சந்திரலேகா குடும்ப உறுப்பினர்கள் அவரை சமாதானம் செய்து மீண்டும் கணவன் வீட்டிற்கு அனுப்பி வைத்த நிலையில், அங்கு மோகன்குமாரின் தாய் தந்தை மற்றும் அவரது சகோதரி என ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் வரதட்சணைக்காக சந்திரலேகாவை துன்புறுத்தி உள்ளனர்.
சந்திரலேகா 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அவரை பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லாமல் அவருக்கு தேவையான உணவு வழங்காமல் தந்தை வீட்டில் இருந்து அனுப்பி வைத்த உணவுப் பொருட்களை கூட சாப்பிட விடாமல் தொடர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளதாக சந்திரலேகா குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். வரதட்சணை கொடுமை உச்சத்தில் இருந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 2-வது வாரத்தில் தனது மனைவியை காணவில்லை என்று மோகன்குமார் தனது மாமனார் வீட்டில் தெரிவித்துள்ளார். மேலும், தனது மனைவியை நான் தேடப்போவது இல்லை என்றும் வேண்டும் என்றால் நீங்களே தேடிக்கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார். மனைவி காணாமல் போன பிறகு இது குறித்து மோகன்குமார் காவல்துறைக்கு புகார் அளிக்காத நிலையில் வீட்டில் இருந்து ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் துணிமணிகளை எடுத்துக்கொண்டு தனது மனைவி வீட்டை விட்டு ஓடி விட்டதாக தொடர்ந்து நாடகம் ஆடியுள்ளார்.
மோகன் குமார் மீது சந்தேகம் அடைந்த பெண் வீட்டார் காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில் மோகன் குமார் மற்றும் அவரது தாய், தந்தையினர் தலைமறைவாகி விட்டனர். 25 நாள் தலைமறைவாக இருந்த மோகன் குமார், அவனது வழக்கறிஞரை சந்தித்து ஜாமீன் மனுவில் கையொப்பமிட வந்த போது அங்கு மறைந்திருந்த காவல்துறையினர் அவனை கைது செய்தனர். பின்பு காவல் நிலையத்தில் உரிய முறையில் விசாரித்த போது தனது மனைவியை கொலை செய்து வனப்பகுதியில் புதைத்ததை ஒப்புக்கொண்டார்.