அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் கிளம்பியது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கைக் கையில் எடுத்தது. இதுதொடர்பாக கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பல களேபரங்கள் அரங்கேறின. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையிலேயே இருந்து வந்தார். இதற்கிடையே, திடீரென இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைத்துறை பிரிவு வார்டில் அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.