ஹெட்செட் பயன்படுத்துவது மற்றும் சத்தமாக இசையமைக்கும் இடங்களில் பயணிப்பது காரணமாக 100 கோடிக்கும் மேலான இளைஞர்கள், வயது வந்தோர்களுக்கு காது கேளாமை ஏற்படும் அபாயம் உள்ளது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனம் உலகளவில் 430 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், BMJ குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, இளைஞர்கள் குறிப்பாக ஸ்மார்ட்ஃபோன்கள், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்கள் போன்ற தனிப்பட்ட கேட்கும் சாதனங்களைப் பயன்படுத்துவதால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

அவர்கள் செய்த ஆராய்ச்சியின்படி, வயதுவந்தோர் மற்றும் இளைஞர்கள் 105 dB வரை அதிக ஒலியளவைத் தேர்வு செய்கிறார்கள் என்றும், அதே சமயம் 104 முதல் 112 dB வரையிலான பொழுதுபோக்கு இடங்களில் சராசரி ஒலி அளவுகள் அனுமதிக்கப்படும் அளவுகளை மீறுகின்றனர் என்றும் தெரியவந்துள்ளது. அதிக சத்தம் எழுப்பும் இடங்களில் பயணிப்பது சராசரியாக உயர்ந்துள்ளதாகவும், இதன் மூலம் இளைஞர்களின் காது கேட்கும் திறன் குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் 0.67 முதல் 1.35 பில்லியன் அதாவது 100 கோடி பேர், வயது வந்தோர் மற்றும் இளைஞர்கள் காது கேளாத அபாயத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கணக்கிடுகின்றனர். ‘பாதுகாப்பான கேட்கும் நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் உலகளாவிய செவிப்புலன் இழப்பைத் தடுப்பதற்கு அரசுக்கு தொழில்துறை மற்றும் சிவில் சமூகம் முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசர தேவை உள்ளது’ என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.