கடந்த சில காலமாகவே ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை குறித்து பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
ரஷ்யாவில் பல ஆண்டுகளாக விளாடிமிர் புதின் அதிபராக இருந்து வரும் நிலையில், அவர் சாகும் காலம் வரை அவர் தான் அதிபராக இருக்கும்படி சட்டத்தையும் மாற்றிக் கொண்டார். அங்கு தேர்தல் என்ற பெயரில் வாக்குப்பதிவு நடந்தாலும் கூட, எதிர்க்கட்சி வேட்பாளர்களை ஏதாவது ஒரு காரணம் சொல்லி நிராகரித்து விடுவார்கள்.
இதற்கிடையே, ரஷ்ய அதிபரின் உடல்நிலை குறித்த தகவல்கள் அவ்வபோது வெளிவந்து கொண்டிருக்கும். அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும் அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சில செய்திகள் வெளியானது. மேலும், அவருடைய கைகளில் நரம்பியல் பிரச்சனை இருப்பதால் அவரால் தன்னுடைய கைகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் கூறப்பட்டது.
ஆனால், தற்போது புதிதாக ரஷ்ய அதிபர் புதினுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு படையின் ஜெனரல் அவ்வப்போது அங்கு நடக்கும் சம்பவங்கள் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிப்பார். அந்த நபர்தான் ரஷ்ய அதிபருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ள தகவலையும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சரியாக 9.00 மணி அளவில் புதின் தன்னுடைய அறையில் சரிந்து கிடந்ததாகவும், அப்போது அவருடைய மேஜை கவிழ்ந்து அதன் மேலிருந்த உணவுகள் சிதறிக் கிடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என பாதுகாப்பு படை ஜெனரல் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபரின் மாளிகையில் எப்போதும் மருத்துவர்கள் தயாராக இருப்பார்கள் என்பதால், உடனடியாக அவர்களை அழைத்து புதினுக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சரியான நேரத்தில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டதால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படவில்லை என்றும், சிறிது நேரத்திலேயே அவருக்கு சுயநினைவு வந்துவிட்டது என்றும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், அதிபர் மாளிகையில் யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. அதேசமயம் மறுக்கவும் இல்லை. கடந்த காலங்களில் கூட இதே போன்று ரஷ்ய அதிபர் உடல்நிலை குறித்து வெளியான தகவல்களுக்கு, அதிபர் மாளிகையில் எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது புதின் ஆரோக்கியமாக இருப்பதாகவே ரஷ்யா திட்டவட்டமாகக் கூறியுள்ளது.