குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை முதல் டெல்லியை நோக்கி டிராக்டரில் பேரணி சென்று கொண்டிருக்கின்றனர். இன்று காலை 10 மணியளவில் ஃபதேகர் சாஹிபில் இருந்து அணிவகுப்பைத் தொடங்கி, ஷம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி விவசாயிகள் செல்கின்றனர்.
ஃபதேகர் சாஹிப் மற்றும் ஷம்பு எல்லைக்கு இடையிலான தூரம் 35-40 கி.மீ. ஆகும். இப்போராட்டத்தில் விவசாயிகளுடன் முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என குடும்பத்தினரும் டிராக்டரில் அமர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஹரியானாவில் உள்ள அதிகாரிகள் அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருஷேத்ரா, சிர்சாவில் பல இடங்களில் கான்கிரீட் தடுப்புகள், ஆணிகள், முள்கம்பிகளைப் பயன்படுத்தி பஞ்சாப், ஹரியானாவில் இருந்து டெல்லி செல்லும் எல்லைகளை அடைத்துள்ளனர்.
பஞ்சாப் – ஹரியானா எல்லைகளில் பல இடங்களில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் உள்ளிட்ட கலவரக் கட்டுப்பாட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏராளமான காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா அரசு 15 மாவட்டங்களில் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், அம்பாலாவில் உள்ள ஷம்பு எல்லையை அடைந்த விவசாயிகள் தடுப்புகளை உடைக்க முற்பட்டனர். அப்போது பேரணி குழுவினர் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அந்த இடத்தில் இருந்து அனைவரும் சிதறி ஓடினர். அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது. கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.