பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்க வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வேட்டி சேலைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிவதாக அலுவலக வளாகத்தில் பணியில் இரவு நேரக் காவலர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல்கட்ட விசாரணையில், மதுரை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 50,000 வேட்டி, சேலைகள் இந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும், இந்த சம்பவம் குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, பொங்கல் பண்டிகைக்கு பரிசு பெட்டகம் வழங்க இன்று காலை டோக்கன் வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மதுரையில் பொதுமக்களுக்கு வழங்க வைக்கப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொங்கல் வேட்டி, சேலை எரிந்து நாசமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.