நாட்டில் விற்பனை செய்யப்படும் மருந்துகளில் 103 மருந்துகள் தரமற்றவை என மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் மாத்திரைகள் மற்றும் மருந்துகளை மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் (CDSCO) முறையாக ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வின் போது போலி மற்றும் தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடந்த பிப்ரவரி மாதம் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றில், சளித் தொற்று, கிருமித் தொற்று, சா்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 103 மருந்துகள் தரமற்றவை என்பது தெரியவந்தது.
இதில் பெரும்பாலான மருந்துகள் இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. தரமற்ற மருந்துகளின் விவரங்கள் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த விவரங்களை பார்த்து தெரிந்து கொண்டு, விழிப்புணா்வுடன் இருக்குமாறு மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தரமற்ற மருந்துகள் விற்பனை செய்தால், நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Read More : ’செங்கோட்டையனின் டெல்லி பயணம்..!! விஜய்யின் விமர்சனம்..!! மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ கொடுத்த ரியாக்ஷன்..!!