மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் இரண்டு 4 சக்கர வாகனங்கள் மீது எரிவாயு டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்தனர். புதன்கிழமை இரவு 11 மணியளவில் பத்னாவர்-உஜ்ஜைன் நெடுஞ்சாலையில் உள்ள பமன்சுதா கிராமத்திற்கு அருகிலுள்ள சாலையில் சென்று கொண்டிருந்த எரிவாயு டேங்கர் லாரி, எதிர் திசையில் இருந்து வந்த ஒரு கார் மற்றும் ஜீப்பில் மோதியதாக எஸ்பி மனோஜ் குமார் சிங் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து, தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினர். இந்த விபத்தில் படுகாயமடைந்த மேலும் 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டேங்கர் லாரி மோதியதில் அப்பளம்போல் நொறுங்கிய வாகனங்களில் இருந்து சடலடங்களை போலீசார் மற்றும் மீட்புப் படையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகே வெளியே எடுத்தனர். இந்த விபத்தில் இறந்தவர்கள் ஜோத்பூர், மாண்ட்செளரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.