பெட்ரோல், டீசலின் அதிகப்படியான விலை, அதன் மூலம் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பு, அரபு நாடுகளின் கச்சா எண்ணெய் ஆதிக்கத்தை குறைக்க மேற்கத்திய நாடுகள் எலக்ட்ரிக் வாகனங்களின் ஊக்குவிப்பு ஆகியவை மூலம் ஆட்டோமொபைல் துறையின் எதிர்காலம் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்று 99 சதவீதம் உறுதியாகியுள்ளது. தற்போது எலக்ட்ரிக் வாகனங்களில் இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் அதன் விலை. எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தியில் பெரும் பகுதி அதன் பேட்டரி பேக்கேஜ் அடிப்படையில் இருக்கும் காரணத்தால் லித்தியம் உலோகம் முதல் பல்வேறு உலோகங்களின் விலை இதில் அதிகம் பாதிக்கப்படும்.
பெட்ரோல், டீசல் கார்களுக்கு மாற்றாக விலை உயர்ந்த எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்தால் மக்கள் கட்டாயம் வாங்கமாட்டார்கள். இதனால் மக்களுக்கு, உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏதுவான சூழ்நிலையை எலக்ட்ரிக் வாகன சந்தையில் உருவாக்க வேண்டும் என்பதற்காக உலக நாடுகள் அதிகப்படியான மானியம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில் உலகளவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியிலும், தயாரிப்பிலும் முன்னோடியாக இருக்கும் சீனா-வில் எலக்ட்ரிக் கார்-களின் சுடுகாடு இருப்பதை ஒரு யூடியூபர் கண்டுப்படித்துள்ளார். இந்த வீடியோ மூலம் எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் எப்படி சீன அரசையும் முதலீட்டாளர்களையும் ஏமாற்றுகிறது என வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
EV Winston Sterzel என்ற யூடியூபர், சீனாவில் எடுக்கப்பட்ட ஒரு டிரோன் வீடியோ-வை அப்லோடு செய்துள்ளார். இந்த வீடியோவில் திறந்த வெளியில் 10000த்திற்கும் அதிகமான புதிய எலக்ட்ரிக் கார் அரசால் பதிவு செய்யப்பட்ட நம்பர் பிளேட் உடன் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதுமட்டும் அல்லாமல் கார் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்தை சுற்றி புல் விளைந்திருப்பது மட்டும் அல்லாமல் பலமாதங்கள் ஒரே இடத்தில் கார் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான அடையாளமாக கார் மீது தூசி படிந்துள்ளது. இந்த இடத்தில் சமீபத்தில் சீனாவில் வெளியான Geely Kandi K10 EV, Neta V மற்றும் BYD e3 மாடல் கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த வீடியோ Zhejiang மாகணத்தின் Hangzhou மாவட்டத்தில் எடுக்கப்பட்டு உள்ளது. எதற்காக இங்கு இத்தனை கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்பது தான் தற்போது முக்கியமான கேள்வி.
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் புதிய கார்களை டீலர்களுக்கு கொடுத்து விற்பனை செய்ய வேண்டும் என்று தான் நினைக்கும், அப்படியிருக்கும் போது வெறும் 31 மையில் மட்டுமே ஓடிய புது கார்கள் எதற்காக இப்படி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எலக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனங்கள் அரசிடம் மானிய தொகை பெற வேண்டியும், முதலீட்டாளர்களிடம் அதிகப்படியான மதிப்பீட்டில் அதிக முதலீட்டை பெற வேண்டியும், அதிக விற்பனை எண்ணிக்கையை காட்ட போலியாக முகவரியில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு கணக்கு காட்டியுள்ளது. ரிஜிஸ்டர் செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை லிமிட்டை தாண்டிய நிலையில் இப்படி திறந்தவெளியில் வேறு வழியில்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. புதிய கார் என்பதை கிலோமீட்டர் ரீடிங், சீட் கவர் கூட பிரிக்காமல் இருப்பது மூலம் உறுதி செய்யப்படுகிறது. இதன் மூலம் யூடியூபர் Winston Sterzel எலக்ட்ரிக் கார்-களின் சுடுகாடு என அழைக்கிறார்.