தமிழ்நாட்டில் 50% பேருக்கு பருவநிலை மாற்றம் காரணமாக சிறுநீரக நோய்களும், சிறுநீரக செயலிழப்பும் ஏற்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இன்று உலக சிறுநீரக தினம் 2025. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இரண்டாம் வியாழக்கிழமை அன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு ‘உங்களது சிறுநீரகம் நலமா’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினா் செயலா் டாக்டா் என்.கோபாலகிருஷ்ணன் இதுகுறித்து பேசுகையில், ”மனித உயிரைத் தாங்கி நிற்கும் உன்னத உறுப்புகளில் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இதய நலத்திற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவங்களில் ஒரு பங்குகூட சிறுநீரகத்துக்கு கொடுக்கப்படுவதில்லை. இதனால் தான், நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு அதிகரித்து வருகிறது.
அண்மையில் நடத்தப்பட்ட கள ஆய்வு ஒன்றில், இணை நோய்கள் இல்லாத 53% பேருக்கு சிறுநீரக செயலிழப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் கட்டுமானத் தொழிலாளா்களும், விவசாயத் தொழிலாளா்களும் ஆவர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் அதீத வெப்பநிலை, காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் நபருக்கும் சிறுநீரக பாதிப்பு வரக்கூடுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து சுகாதார நிலையங்களிலும் ஆரம்ப நிலை பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
பெரும்பாலும் சிறுநீரக செயலிழப்புக்குள்ளான இறுதி நிலையில் தான், பாதிப்பு கண்டறியப்படுகிறது. டயாலிசிஸ் சிகிச்சைகளும், உறுப்பு மாற்று சிகிச்சைகளும் மட்டுமே இதற்கு தீர்வாக உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 18% போ் நீரிழிவு நோயாளிகளாகவும், 25% போ் உயா் ரத்த அழுத்த நோயாளிகளாகவும் உள்ளனர். இதனல், உறுப்பு கொடைக்காக காத்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, சிறுநீரகத்தின் நலனைப் பாதுகாப்பது மிக மிக அவசியம். அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும், புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நேரடி வெயிலில் பணியாற்றுவதை தவிா்க்க வேண்டும்” என்றார்.