அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா போன்ற பெருநிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பிரபல ப்ரொபஷனல் சமுக வலைத்தளமான LinkedIn நிறுவனமும் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அண்மை காலமாக சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பல மென்பொருள் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது வாடிக்கையாகவே கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட், கூகுள், ஸ்பாடிபை போன்ற பெருநிறுவனங்கள் அடுத்தடுத்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், தற்போது பிரபல ப்ரொபஷனல் சமுக வலைத்தளமான LinkedIn நிறுவனமும் 716 ஊழியர்களை பணியை விட்டு நீக்கியுள்ளது.
மைக்ரோசாப்ட் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் LinkedIn நிறுவனத்தில் சுமார் 20,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆட்குறைப்பின் அளவின் படி கிட்டத்தட்ட 3.5 சதவீத பேரை பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, LinkedIn நிறுவனத்தின் சீன வேலைவாய்ப்பு தளத்தை அந்நிறுவனம் முற்றிலுமாக மூடிவிட்டது. இருப்பினும் LinkedIn தளத்தை சீன வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம் அதில் எந்த தடையும் இல்லையாம். இத்தனைக்கும் கடந்த காலங்களை காட்டிலும் மைக்ரோசாப்ட் நிர்வாகம் அதிகப்படியான நிதி ஆதாரங்களை வைத்துக்கொண்டு இருப்பதோடு, LinkedIn நிறுவனமும் கடந்த காலாண்டில் அதிகப்படியான லாபத்தை தான் ஈட்டிக் கொடுத்துள்ளதாம். அப்படி இருந்து தற்போது எடுக்கப்பட்டுள்ள பணிநீக்க நடவடிக்கை ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, LinkedIn நிறுவனத்தின் CEO ரேயன் ராஸ்லான்ஸ்கை கூறுகையில், இந்த பணிநீக்கத்தின் மூலம் நிறுவனத்தின் ஆப்ரேஷனஸ் மிகவும் எளிதாகியுள்ளதாகவும், அதிலும் குறிப்பாக பயனர்கள் தங்கள் தளத்தை பயன்படுத்தும்போது தேவைப்படும் பல மட்ட ஒப்புதல் அளிக்கும் நடைமுறை, இந்த பணிநீக்கம் மூலம் விரைவாக செய்ய முடியும் என்பதை சாத்தியப்படுத்தியுள்ளதாகவும், இதன் மூலம் முடிவுகள் வேகமாக எடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.