சென்னையில் மின்சார ரயில்கள் புறநகர் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. புறநகர் பகுதிகளில் இருந்து பள்ளி-கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என லட்சக்கணக்கானோர் சென்னைக்கு மின்சார ரயில்கள் மூலம் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த ரயில்கள் நாளை முதல் பராமரிப்பு பணி காரணமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நாளை நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 14ஆம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் இரவு நேர கடைசி மின்சார ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது பராமரிப்பு பணிகளுக்காக மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் தெற்கு ரயில்வே இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் “பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரயில் நிலையத்தில் நவம்பர் 29 முதல் டிசம்பர் 14ஆம் தேதி நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயிலும், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.