நாம் விரும்பி சாப்பிடும் இறைச்சிகளில் வெறும் ரத்தமும், சதையும் மட்டுமில்லை. நோய் தடுப்பு வேதியியல் பொருட்களும் கலந்திருக்கிறது. ஒவ்வொரு கிராம் இறைச்சிக்காகவும் 114 மிகி ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுவது ஆய்வில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நவீன காலகட்டத்தில் ஆண்டிபயாடிக் எனும் நோய் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு தவிர்க்க முடியாததாகிவிட்டது. இருப்பினும், பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியாகியுள்ள ஆய்வுக் கட்டுரை பல அதிர்ச்சி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஆய்வின்படி, உலகம் முழுவதும் 70% ஆண்டிபயாடிக் மருந்துகள் பண்ணை விலங்களுக்கு கொடுக்கப்படுவது தெரியவந்துள்ளது. ஆண்டிபயாடிக் மருந்துகள் அதிகப்படியான பயன்பாடு தொடர்பாக விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு மட்டுமின்றி, மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விலங்குகள், பறவைகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் எந்தளவுக்கு கொடுக்கப்படுகிறது என்பதை ஒரு கிலோ இறைச்சியை கொண்டு மதிப்பீடு செய்துள்ளனர்.
எந்த இறைச்சிகளில் எவ்வளவு ஆண்டிபயாடிக்..?
* அதிகபட்சமாக, ஒரு கிலோ செம்மறி இறைச்சிக்காக 243 மில்லி கிராம் ஆண்டிபயாடிக் மருந்து கொடுக்கப்படுகிறது.
* ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கு 173 மில்லி கிராம் ஆண்டிபயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது.
* அதேபோல் மாடுகளின் ஒரு கிலோ இறைச்சிக்காக 60 மில்லி கிராம் ஆண்டிபயாடிக்கும் தரப்படுகிறது.
* கோழி இறைச்சிக்காக 35 மில்லி கிராமும் ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்படுவது கடந்த 2020இல் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
190 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, பண்ணை விலங்களுக்கான ஆண்டிபயாடிக் மருந்துகள் பயன்பாட்டில் இந்தியா 30-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.