கோவை மாவட்டம் பல்லடம், உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கறிக்கோழி பண்ணைகள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்கு அதிக அளவில் கறிக்கோழி ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக மொத்த வியாபாரிகளுக்கு 70 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று முதல் மொத்த வியாபாரிகளுக்கு கிலோ 128 ரூபாய்க்கும், சில்லறை கடைகளுக்கு 135 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று கோவையில் ஒரு கிலோ கோழிக்கறி 250 ரூபாய் முதல் 320 ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது. இதனால் கோவை மாவட்ட ஓட்டல் சங்கத்தினர் கோழிக்கறி உயர்வு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதுகுறித்து பேசிய சங்கத்தினர், “ஒரு கிலோ கோழி உயிருடன் 75 முதல் 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், குறுகிய காலத்தில் 132 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. உரித்தகோழி கிலோ 250 – 320 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் அசைவ ஹோட்டல் நடத்துவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதே நிலை தொடர்ந்தால் அசைவ உணவுகளின் விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தமிழக முழுவதும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்து காணப்படும் நிலையில், காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி மொத்த விற்பனையில் 70 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் 85 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில், கோழிக்கறியின் விலையும் அதிகரிப்பது இல்லத்தரசிகளையும், அசைவ பிரியர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.