பெற்ற தாயை இரண்டு முறை கற்பழித்த மகனுக்கு கொல்கத்தா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூர் காவல் நிலையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி 65 வயது பெண் ஒருவர் தனது மகன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், “குடி போதைக்கு அடிமையான இளைய மகன் 7 முறை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர். இருப்பினும் அவர் போதை பழக்கத்தில் இருந்து மீளவில்லை. மூத்த மகனின் திருமணத்திற்குப் பிறகு, எனது 33 வயது இளைய மகனுடன் வசித்து வந்தேன்.
ஏப்ரல் 14ஆம் தேதி இளைய மகன் என்னை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தான். இருப்பினும், சமூகம் பற்றிய பயம் காரணமாக இதை நான் யாரிடமும் கூறவில்லை. ஆனால், என் மவுனம் என்னை மேலும் சித்திரவதை செய்ய ஊக்குவிப்பதாகத் தோன்றியது. பின்னர், அதே ஆண்டு மே 5ஆம் தேதி, மீண்டும் என்னை பலாத்காரம் செய்தான். இதை தொடர்ந்து போலீசில் புகார் அளித்துள்ளேன்” என தனது மனுவில் கூறியிருக்கிறார்.
இதையடுத்து, அவரது மகனை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். பாதிக்கப்பட்ட தாயின் மருத்துவ மதிப்பீடு, அவரது சாட்சியம் மற்றும் 7 கூடுதல் சாட்சிகள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது. இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.