நெல்லை இருட்டுக்கடையை வரதட்சணையாக கேட்டு மிரட்டல் விடுப்பதாக மருமகன் மீது கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.
நெல்லை இருட்டுக்கடை மிகவும் பழைமையான கடையாகும். இந்தக் கடையானது பெயருக்கு ஏற்றவாறு இருட்டான சூழ்நிலையில்தான் பல ஆண்டுகள் நடைபெற்று வந்தது. பல வருடங்களுக்கு முன்பு வரை 40 வாட்ஸ் குண்டு பல்புதான் அந்தக் கடையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது சிறிது மாறுதல் செய்யப்பட்டு 200 வாட்ஸ் பல்ப் ஒளிர்கிறது.
இந்தக் கடை பழைய பாரம்பரிய முறைப்படி இன்னும் அதே பழைய கட்டடத்தில்தான் செயல்பட்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் இங்கு பயன்படுத்தப்படும் பணப்பெட்டியில் தொடங்கி அல்வா சுமந்து செல்லும் கொள்கலன்கள் வரை அனைத்தும் பழைய பாரம்பரியம் மிக்கவையே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருட்டுக்கடை சாயங்காலம் சுமார் 5.30 மணிக்கு மேல் திறக்கப்படும். இரவில் மட்டுமே அல்வா கிடைக்கும் என்பதால் அதற்கு இருட்டுக்கடை அல்வா என்று பெயர் ஏற்பட்டுவிட்டது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்[உ இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் இல்லத் திருமண விழா நெல்லையில் மிக விமர்சையாக நடைபெற்றது. பலர் வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர். திருமண விழா பாரம்பரிய முறையில் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது. ஆட்டம் பாடம் கொண்டாட்டம் என அந்த இடமே களைகட்டியது.
இந்த நிலையில், உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா குழுமத்தின் உரிமையாளர் கவிதா சிங், தனது மருமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு மிரட்டுவதாக திருநெல்வேலி போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார். கவிதா சிங் அளித்த புகாரில், “எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவிற்கும் கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 2, 2025 அன்று தாழையத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு, கனிஷ்கா தனது கணவருடன் கோவையில் வசித்து வந்தார்.
பல்ராம் சிங்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை கனிஷ்கா கண்டித்ததால் அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த கனிஷ்கா கடந்த மார்ச் 15ம் தேதி பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். மறுநாள் இரவு, பல்ராம் சிங்கும் அவரது குடும்பத்தினரும் கவிதா சிங்கின் வீட்டிற்கு வந்து, கனிஷ்காவுடன் நல்ல முறையில் வாழ வேண்டுமென்றால் கூடுதல் வரதட்சணை தர வேண்டும் என்றும், நெல்லையில் இயங்கி வரும் இருட்டுக்கடை கடையை பல்ராம் சிங்கின் பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றும் மிரட்டியதாக புகார் அளித்தார்.