அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக 11ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் 24,310 தொடக்கப்பள்ளிகளும், 7,024 நடுநிலைப்பள்ளிகளும், 3,135 உயர்நிலைப்பள்ளிகளும், 3,110 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 37,579 பள்ளிகள் இருக்கின்றன. இதில், சில பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை இன்றளவும் நீடித்து வருகிறது. இதனால், மாணவர்களை சேர்த்து வைத்து பாடம் நடத்துவது, வகுப்பு முடிந்த நேரத்திலும் பாடம் நடத்துவது என ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க சில பள்ளிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 11ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளன.

ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்யவும், மாணவர்களை வேறு வகுப்பிற்கு மாற்றம் செய்யவும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். தொழில் பிரிவுக்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை, பணியாற்றி வரும் ஆசிரியர் ஓய்வு பெறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் குறைந்த அளவிலேயே மாணவர் சேர்க்கை உள்ள தொழிற் பாடப் பிரிவுகளை மூடுவதற்கு பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.