விக்டோரியா பப்ளிக் ஹால் புனரமைக்கப்பட்டு, மீண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. விரைவில் முதலமைச்சர் ஸ்டாலினால் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
அதாவது, வரலாற்றுச் சின்னமான இந்தக் கட்டடம் கிட்டத்தட்ட 32.62 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள பல வரலாற்றுக் கட்டடங்கள் ‘சிங்கார சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
அதன்படி, மெட்ராஸ் உயர்நீதிமன்றம், விக்டோரியா பப்ளிக் ஹால் போன்ற பல கட்டடங்களைப் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. பல வருடங்களாக அழுக்குப் படிந்துபோய் காட்சியளித்த பாரம்பரிய கட்டடங்கள், மீண்டும் இந்த ஆட்சியில் மறு உயிர்பெற்று வருகின்றன. அறிவிப்பு வெளியாகும்போதே இந்த விக்டோரியா அரங்கம் எப்படிப் புதுப்பிக்கப்பட உள்ளது என்று ஒரு விளக்கம் படமும் மக்கள் பார்வைக்காக முன்வைக்கப்பட்டது.
இந்த ஹாலின் தரைதளத்தில் திறந்தவெளி கண்காட்சிக் கூடம் அமைக்கப்படும் என்றும் அதில் பொதுமக்கள் நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வதற்கான வசதிகளும் செய்துதரப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. அதன்படி, இப்போது இந்த அரங்கம் வடிவமைக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கான தயார் நிலையை எட்டி உள்ளது.
மேலும், முதல் மாடியில் வரலாற்றுப் பெருமைகளை எடுத்துக்கூறும் வகையில் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அங்கே, ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள், சென்னை மாநகரத்தின் அந்தக் கால மேப், பழங்காலச் சிற்பங்கள், கல்வெட்டுகள் எனப் பல பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அது சரி, இந்த விக்டோரியா ஹால் எங்கே இருக்கிறது என்கிறீர்களா? ரிப்பன் பில்டிங்குக்கும் சென்ட்ரல் ஸ்டேஷனுக்கும் நடுவில்தான் இது இருக்கிறது.