குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் 2023 பொங்கல் பண்டிகைக்கு தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று, பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முக்கிய காரணமே தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள்தான். தமிழ்நாட்டில் குடும்ப தலைவிக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்து இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பெண்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால், தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அந்த திட்டம் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14 லட்சம் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை என்றும் அவர்களை உடனே கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, இது மாதம் ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கும் திட்டத்தை தொடங்குவதற்கான முன்னோட்டமா என்று கேள்வி எழும்பி உள்ளது. இதன்மூலம் 2023 பொங்கலுக்கே இந்த திட்டம் தொடங்கப்படும் என தெரிகிறது.