பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தால் நேற்று ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது நேற்று அதிகாலை இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். பஹவல்பூர் முதல் கோட்லி வரை 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. முப்படைகள் கூட்டாக இணைந்து நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என ராணுவம் தெரிவித்தது.
இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்கர்கள் பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு குடிமக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசனையை வெளியிட்டது. வெளியுறவுத்துறையின் ஆலோசனைக் குறிப்பில், “இந்தியா பாகிஸ்தானுக்குள் நடத்திய இராணுவத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நிலமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
பயங்கரவாதம் மற்றும் ஆயுத மோதல்களுக்கான சாத்தியக்கூறுகள் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் பாகிஸ்தானுக்கு பயணம் செய்ய வேண்டாம்” என வலியுறுத்தியது. மேலும், வான்வெளி மூடல் குறித்தும், பாகிஸ்தானுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்கர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், எதிர்பாராத விதமாக இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அந்தப் பகுதியை விட்டு வெளியேறவும் வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மற்றொரு நாடாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அந்நாட்டு மக்களை எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலினால் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு பயணம் செய்யவேண்டாம் என அறிவுறுத்துகிறோம். இந்தியா-பாகிஸ்தான் தாக்குதல் குறித்து நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என தெரிவித்துள்ளது.