புகைப்படம் எடுப்பதற்காக வந்தே பாரத் ரயிலில் ஏறி விஜயவாடா வரை பயணிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஆந்திராவை சேர்ந்த ஒருவர்.
ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் உள்ள வசதிகளை புகைப்படம் எடுப்பதற்காக 40-45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரயிலில் ஏறியிருக்கிறார். ஆனால், அவர் ஏறிய சில நொடிகளிலேயே கதவுகள் அடைக்கப்பட்டு ரயில் புறப்பட்டு விட்டது. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவர், டிடி-யிடம் சென்று ’கதவை திறந்து என்னை இறக்கி விடுங்கள்’ என்று கேட்டுள்ளார். டிடி தரப்பில், ‘இந்த ரயிலில் அதுபோல் செய்ய இயலாது. இனி அடுத்து ரயில் நிலையம் வரும் ஸ்டாப்பிங்கில் மட்டுமே இறங்க முடியும் என்றும், இந்த ரயில் அடுத்து விஜயவாடாவில் நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார். அதற்கு முன் டிக்கெட் இல்லாமல் ரயில் ஏறிய காரணத்திற்காக, டிக்கெட் தொகையுடன் அபராதத்தையும் செலுத்துங்கள்’ டிடி என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் டிடியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் டிடி, ‘ரயில்வே சட்டப்படி உங்கள் வாக்குவாதம் எடுபடாது. எனவே, நீங்கள் விஜயவாடா வரை பயணம் செய்தாக வேண்டும். கதவையும் நான் திறக்க முடியாது. கதவின் முழு கட்டுப்பாடு அனைத்தும் ரயில் டிரைவரிடம் இருக்கும்’ என்று கூறிவிட்டார். எனவே வேறு வழியில்லாமல் அந்த நபர் விஜயவாடா வரை பயணம் செய்துள்ளார். தெரியாமல் நடந்த அந்த தவறுக்காக அந்த நபரை ரயில்வே அதிகாரிகள் எச்சரித்து ரயிலில் இருந்து இறங்கி செல்ல அனுமதித்தனர். கிட்டத்தட்ட 150 கி.மீக்கும் மேலாக, சுமார் 6 மணி நேரம் கூடுதலாக அவர் பயணம் செய்திருக்கிறார்.