சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்டத்தில் சகோதரிகள் இருவர், ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாடிவிட்டு, கடந்த 31ஆம் தேதி ஆண் நண்பருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். பன்சோஜ் கிராமத்தின் வழியே சென்றபோது அவர்களை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, அவர்களிடமிருந்த செல்போன் மற்றும் பணத்தை பறித்துள்ளது. அப்போது, மேலும் 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளது.
பின்னர், அந்த சகோதரிகளை தனிமையான இடத்திற்கு தூக்கிச் சென்று அவர்களைத் தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இந்த சம்பவம் அனைத்தும் அந்த சகோதரிகளின் ஆண் நண்பர் கண்முன்னேயே அரங்கேறியுள்ளது. அவரும் கடுமையாக தாக்கப்பட்டார். பின்னர், அந்த கும்பல் அவர்களை விட்டு விட்டுத் தப்பிச் சென்றது. பாதிக்கப்பட்ட சகோதரிகளில் ஒருவருக்கு 19 வயது என்றும் மற்றொருவருக்கு 16 வயது என்றும் கூறப்படுகிறது.
பின்னர், இதுகுறித்து போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், வழிப்பறி செய்தது பூனம் தாக்கூர் என்பவரது கும்பல் எனத் தெரியவந்தது. பூனம் தாக்கூர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, இரு சகோதரிகளையும் பாலியல் பலாத்காரம் செய்த பூனம் தாக்கூர் உள்பட 10 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கொலை, பாலியல் வழக்குகளில் தொடர்புடைய பூனம் தாக்கூரின் தந்தை லக்ஷ்மி நாராயண் சிங், உள்ளூர் பாஜக தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.