ஐபிஎல் 2025-ன் 36வது போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. இதற்கிடையே, இம்பேக்ட் பிளேயராக 14 வயது நிரம்பிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடக்க வீரராக களமிறங்கினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார். இதன் மூலமாக ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் அறிமுகமான வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்றார். அவருக்கு வயது 14 ஆண்டுகள் 23 நாட்கள் ஆகிறது. ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு ரூ.30 லட்சம் அடிப்படை விலைக்கு விண்ணப்பித்திருந்த பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
இந்தப் போட்டியில் 20 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட மொத்தம் 34 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். இந்நிலையில், ஆட்டம் இழந்தவுடன் வைபவ் திடீரென கண்ணீர் விட்டபடி பெவிலியன் திரும்பினார். அவருக்கு சஞ்சு சாம்சன் உள்பட பலர் ஆறுதல் கூறி தேற்றினர்.
இவரது விளையாட்டை பலரும் வியந்து பாராட்டும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சையும் தனது பாராட்டை வெியிட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இன்று அதிகாலை எழுந்தவுடன் 8வது படிக்கும் சிறுவன் ஐபிஎல் விளையாடியதைப் பார்த்தேன். என்னமாதிரியான அறிமுகம் இது” என்று தனது வியப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதே போன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், “14 வயதில் பேட்டிங் செய்ய வந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு பெரிய விசில் அடிப்போம்” என்று கூறி தனது பாராட்டை பதிவிட்டுள்ளது.
Read more: சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து ஆன்லைன் முன்பதிவு மோசடி..!! செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்..