உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு சாதனையை படைத்து வருகிறார் கேப்டன் ரோகித் ஷர்மா. இன்றைய போட்டியில் உலகக் கோப்பை தொடரில் 50 சிக்ஸர்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்றுக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த நிலையில், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று முதலாவது அரையிறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் ஷர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரோகித் ஷர்மா 29 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 47 ரன்கள் அடித்த நிலையில், ஆட்டமிழந்தார். இந்த ஆட்டத்தில் அடித்த 4 சிக்ஸர்களையும் சேர்த்து ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அவர் 51 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.
இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற சாதனையை ரோகித் ஷர்மா படைத்துள்ளார். இதற்கு முன்னர் மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெயில் 49 சிக்ஸர்கள் அடித்திருந்ததே சாதனையாக இருந்தது தற்போது ரோகித் அந்த சாதனையை கடந்து புதிய சாதனையை படைத்துள்ளார்.