செப்டம்பர் மாதம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அனல் காற்று வீசி வருகிறது. கோடைக் காலத்தைப் போல உச்சி வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. பல மாநிலங்களில் மழை வெள்ளம் கட்டுக்கடங்காத காட்டாறு போல பாய்த்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் பங்குனி மாசம் பல்லைக் காட்டிக் கொண்டு அடிக்கும் வெயிலைப் போல வெப்பம் வெளுத்து வாங்குகிறது.
செப்டம்பர் மாதத்தில் இப்படி ஒரு வெயிலை மக்கள் பார்த்திருக்கவே மாட்டார்கள். வரலாறு காணாத அளவு மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போய் கிடக்கின்றன. காலை வெயிலின் தாக்கம் இருந்து வரும் நிலையில், மாலை 6 மணிக்கு மேல் புழுக்கம் அதிகம் இருக்கிறது. வீடுகளில் ஏசி இல்லாமல் தூங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. காலநிலை மாற்றம் என்பது மழையை மட்டும் அதிகம் கொடுப்பதில்லை. மாறாக மரண அடியைக் கொடுக்கும் அளவுக்கு வெப்பத்தையும் தருகிறது.
இது பற்றி தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில், “சாதாரணமாகவே செப்டம்பர் மாதம் வழக்கத்தைவிட வெயில் சற்று அதிகரிக்கும். அதற்கு காரணம் தென்மேற்கு பருவ காலம் தொடங்குவதற்கு முன்பு கோடைக் காலம் நிலவும். அப்போது சூரியனின் குத்துக் கதிர்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி நகரும். அப்போது தமிழக நிலப்பரப்பைக் கடக்கும். இதனால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். பின்னர் சூரியனின் குத்துக் கதிர்கள் மீண்டும் கீழே வர வேண்டும்.
வடக்கில் இருந்து தெற்காக நகர்ந்து தென்துருவப் பகுதிக்குப் போகும். இப்படி கீழ் நகரும் செயல் செப்டம்பர் மாதத்தில் தான் நடைபெறும். இப்படியான தருணத்தில் ஒரு கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ அதே அளவு வெப்பநிலை 3 வாரங்கள் வரை நீடிக்கும். இந்த வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டின் சில உட்புற பகுதிகளில் மழை பெய்யும். அதன் மூலம் வெப்பநிலை மெல்ல மெல்ல குறையும். இந்த வெப்ப நிலை முற்றிலும் குறைய வேண்டும் என்றால், அது வடகிழக்குப் பருவமழை துவங்கும்போதுதான் அது நடக்கும்.
அப்போது கடலில் இருந்து நமக்குக் காற்று வீசத் தொடங்கிவிடும். அதனால் 34 டிகிரி அளவில் வெப்பம் குறைந்து மிதமான சூழல் ஏற்படும். தென்மேற்கு பருவமழை விடைபெற்றால்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கும். இது வழக்கமாகச் செப்டம்பர் 17-க்குப் பின் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு ஒருவாரம் தாமதமாகத் துவங்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எப்படியும் 25ஆம் தேதிக்கு பிறகே இது நடக்கும்” என்கிறார்.