பிரதமர் மோடி தினமும் மூன்றரை மணிநேரம் மட்டுமே உறங்குகிறார் என்பது போன்ற சுவாரஸ்ய தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி 8 எம்.பிக்களை அழைத்து மதிய உணவுடன் உரையாடல் நடத்தினார். அவர் அழைத்த 8 எம்.பிக்களில் பாஜக மட்டுமல்லாமல் பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். அதன்படி, மோடியுடன் 8 எம்.பிக்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது மோடியிடம் தங்களை ஏன் அழைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது, “உங்களை நான் தண்டிக்கப் போகிறேன், என்னுடன் வாருங்கள்” என்று விளையாட்டாக பதில் அளித்துள்ளார்.
பிரதமர் மோடியின் சந்திப்பிற்கு பிறகு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “நாங்கள் மோடியுடன் மதிய உணவு சாப்பிட்டோம். எங்களுக்கு அரிசி, கிச்சடி, பனீர், பருப்பு, ராகி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் மோடியே அதற்கான பில்லை கொடுத்துவிட்டார். பிரதமர் மோடி எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் நாடாளுமன்ற கேண்டீனில் எங்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். அப்போது அவருடைய தினசரி பழக்க வழக்கங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.
பிரதமர் மோடி எங்களுடன் 45 நிமிடம் பேசியது எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது. அவர் தினமும் வெறும் மூன்றரை மணிநேரம் மட்டுமே உறங்குவதாகவும், மாலை 6 மணிக்கு மேல் எந்தவொரு உணவையும் எடுத்துக் கொள்வது இல்லை என்றும் எங்களிடம் கூறினார்” என்றார்.