Sleep: இந்தியாவில் 78% இளம் தம்பதிகள் தனித்தனியாக தூங்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த போக்கு தொடர்ந்தால் மனநிலை சிக்கலை ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
ResMed’s 2025 Global Sleep Survey-ன்படி, கொரோனா காலத்துக்கு பிறகு தனித்தனியாக உறங்கும் இளம் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்தியாவின் 78% கணவர்களும் மனைவிகளும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் வகையில், தனியாக தூங்குவதை (sleep divorce) தேர்ந்தெடுக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவில் 65%, சீனாவில் 67% இளம் தம்பதிகள் தனித்தனியாக உறங்குவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் 50% இளம் தம்பதிகள் தனித்தனியாகவும், ஒன்றாக சேர்ந்தும் உறங்குகின்றனர்.
இந்த தூக்கக் கலக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக, துணையின் குறட்டை, சத்தமாக சுவாசித்தல் அல்லது காற்றுக்காக மூச்சுத் திணறல் (32%), அமைதியின்மை (12%), பொருந்தாத தூக்க நேரம் (10%) மற்றும் படுக்கையில் திரை பயன்பாடு (8%) ஆகியவை அடங்கும். இந்த இடையூறுகள் காரணமாக இளம் தலைமுறையினர் தனித்தனியாக தூங்குவதாகப் புகாரளிக்கின்றனர். இருப்பினும், தம்பதிகள் சேர்ந்து உறங்குவதே சிறந்தது என்றும் மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றை குறைக்க வழிவகுக்கும் என்றும் கூறுகின்றனர். சேர்ந்து உறங்கும் தம்பதிகள் அதிகளவிலான நன்மைகள் பெறுவதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. தம்பதிகள் தனித்தனியாக உறங்கும் நிலை நீடித்தால் உறவில் விரிசல் ஏற்படுவது மட்டுமின்றி பணி செய்யும் இடங்களில் நிலை தடுமாற வைக்கும் என்றும், மனநிலை சிக்கலை ஏற்படுத்தும்.
நீண்டகால தூக்கமின்மை அறிவாற்றல் வீழ்ச்சி, மனநிலை கோளாறுகள், பதட்டம் மற்றும் மனச்சோர்வு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று ரெஸ்மெட்டின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் கார்லோஸ் நுனேஸ் எச்சரிக்கிறார். சிகிச்சையளிக்கப்படாத தூக்கத்தில் மூச்சுத்திணறல் உள்ள நபர்களில், அபாயங்கள் இன்னும் அதிகமாக இருக்கும், இது இதய செயலிழப்பு, நீரிழிவு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும்.
தூக்க மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிக்கான அமெரிக்க மருத்துவ நிறுவனத்தின் குழு, ஒரு இரவில் ஆறு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குவது அறிவாற்றல் செயல்திறனைக் கணிசமாகக் குறைக்கிறது, இது மொத்த தூக்கமின்மைக்கு சமம் என்று கூறுகிறது. வேலை செயல்திறனில் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என்றாலும், கிட்டத்தட்ட பாதி பேர் தங்கள் முதலாளிகள் தூக்க ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதில்லை என்று நம்புகிறார்கள். கவலையளிக்கும் விதமாக, 70% தொழிலாளர்கள் மோசமான இரவு தூக்கம் காரணமாக ஒரு முறையாவது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக ஒப்புக்கொண்டனர், இது பணியிட உற்பத்தித்திறன், மன உறுதி மற்றும் காலக்கெடுவை பாதிக்கிறது.