குலத்தினை காக்கும் தெய்வமே குலதெய்வம் என்று அழைக்கிறோம். தெய்வங்களிலேயே மிகவும் வலிமையான தெய்வம் என்றால் அது குல தெய்வம் தான் என்று நம்பப்படுகிறது. குல தெய்வம் தான் நமக்கு எளிதில் அருள் தரும். மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களை பெற்றுத் தருவதும் குலதெய்வம் தான். குல தெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும்.
சிறு தெய்வம் என்று அவற்றை அலட்சியப் படுத்தக் கூடாது. அதன் சக்தியை அளவிட முடியாதவை. குல தெய்வத்தை எவர் ஒருவர் தொடர்ந்து வழிபட்டு வருகிறாரோ, அவர் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும். ஒருவரது வம்சாவளியில் வரும் தாத்தா பாட்டி, தாய் தந்தையர் போன்றோர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குலதெய்வத்தை அடியோடு மறந்து இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்க தொடங்கி குலதெய்வ கோயிலுக்கு செல்வதை தவிர்த்து விட்டாலோ குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் உங்களை தாக்கும்.
இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இது தொடராமல் இருக்க, சாப நிவர்த்தி செய்வது அவசியம். நம் முன்னோர்கள் எந்த முறையில் குலதெய்வத்தை வணங்கினார்களோ, அதே முறையில் நாமும் வணங்க வேண்டும். நமது தவறுக்காக குலதெய்வத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டால் சாபம் தீரும். ஒருவரின் குடும்பம் தழைக்க குலதெய்வ வழிபாடு அவசியம். பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம், புகுந்த வீட்டு குலதெய்வம் என 2 குலதெய்வம் உண்டு. திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் சிரமங்களை பெண்கள் சமாளிக்கலாம்.
குலதெய்வங்கள் கர்மவினையை தீர்க்கவல்லவை. கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு குலதெய்வம் தெரியாமலேயே போய்விடும். குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வங்களின் அருள் நிச்சயம் கிடைக்காது. குல தெய்வத்தின் பெருமையை நம் தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு சென்று குலதெய்வத்தின் அனுக்கிரகம், அருள், முன்னோர்களின் ஆசியை பெறுவோம்.
Read More : விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! விவசாய கடன் உச்சவரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!