உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக டிஐஜி வைபவ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். மௌனி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடுவதற்காக ஏராளமான மக்கள் கிரிவலப்பாதையில் குவிந்ததால், இந்த கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதற்கிடையே, கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து நீதித்துறை ஆணையம் விசாரணை நடத்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தனி விசாரணை நடத்தப்படும் என்றார். மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். கடந்த 13ஆம் தேதி முதல் மகா கும்ப மேளா விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 26ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த விழாவில் இதுவரை 22 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து உத்தரப்பிரதேச மாநில மீன்வளத்துறை அமைச்சரும் நிஷாத் கட்சியின் தலைவருமான சஞ்சய் நிஷாத் கருத்து தெரிவித்துள்ளார். “மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது. இவ்வளவு பெரிய நிகழ்வில் கோடிக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் இது மாதிரியான சிறிய சம்பவங்கள் நடக்கும். ஆனால், இனி இது மாதிரியான சம்பவங்கள் நடக்கக் கூடாது. நாங்கள் அனைவரும் விழிப்புடன் இருக்கிறோம். மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.