பெற்றோர்கள் பலர், என் குழந்தையின் எடை அதிகரிக்கவில்லை, சாப்பிட என்ன கொடுப்பது என்று தெரியவில்லை என்று அடிக்கடி புலம்புவது உண்டு. குழந்தைகளுக்கு எந்த சத்துக்களும் இல்லாத நொருக்குத்தீனியை குடுத்து உடல் எடையை அதிகரிக்க வைப்பது முற்றிலும் தவறு. இதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும் ஸ்நாக்ஸ் கூட ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அந்த வகையில், நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்க சிறந்த ஸ்நாக்ஸ் என்றால் அது கடலை மிட்டாய் தான். எல்லா இடங்களிலும் எளிமையாக கிடைக்கும் கடலை மிட்டாயை குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் அவர்களின் உடலுக்கு அதிக வலு சேர்ப்பதுடன், அவர்களின் உடல் எடையும் அதிகரிக்கும்.
கடலை மிட்டாயில் அதிக புரதங்கள் இருப்பது மட்டும் இல்லாமல், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. இதில் அதிக புரதம் இருப்பதால் நமது உடலுக்கு தேவையான பாதி புரதம் இதிலிருந்தே நமக்கு கிடைத்து விடுகிறது. இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சத்துக்கள் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு உதவுவதோடு அவர்களின் உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது. இத்தனை நன்மைகள் கொண்ட கடலைமிட்டாயை வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்வது என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.
இதற்கு முதலில் வேர்க்கடலையை உப்பு சேர்க்காமல் வறுத்து மிக்சியில் போட்டு ஒன்று இரண்டாக அரைத்து கொள்ளவும். பின்னர் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதில் வெல்லம் சேர்த்து பாகு ஆகும் வரை மீடியம் சூட்டில் வைத்து கொதிக்க வைக்கவும். பின்னர் பாகு தயாரானதும் அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலையை அதில் சேர்த்து நன்றாக கிளறி விடவும். பின்பு இதனை வேறொரு பாத்திரத்தில் மாற்றி, வேண்டும் வடிவத்தில் வெட்டி அரை மணி நேரம் காய வைத்து விடுங்கள்.. இப்போது சுவையான கடலை மிட்டாய் தயார்.
Read more: பயணம் செய்யும் போது வாந்தி அல்லது குமட்டல் வருகிறதா? அப்போ இனி இந்த ஒரு பொருள் போதும்..