2021ஆம் ஆண்டு நாடு முழுவதும் நேரிட்ட விபத்துகளில் உயிரிழந்த 83% பேர் காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்த 19,811 பேரில் 16,397 பேர் காரில் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 83% பேர் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் என்றும், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் சீட்பெல்ட் அணியாமல் காரில் பயணித்த 3,863 பேர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் 1,737 பேரும், ராஜஸ்தானில் 1,370 பேரும் சீட்பெல்ட் அணியாமல் சென்றதால் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 45% பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 6,445 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் பலியானதாகவும், தமிழகத்தில் 5,888 பேரும், ராஜஸ்தானில் 4,966 பேரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் மரணமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதாசரிகளில் இறப்பு 30% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல் சென்றதால் நேரிட்ட சாலை விபத்துகளில் 64% பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 74 சதவீதம் பேர் மூளை சாவு அடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.