தமிழ்நாடு சட்டப்பேரவையில் மார்ச் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது உரையாற்றிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ”இதுவரை உரிமைத் தொகை பெறாத தகுதியுடைய இல்லத்தரசிகள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்புகள் வழங்கப்படும். அதேபோல் ‘புதுமைப் பெண்’ திட்டத்தின் கீழ், 4.06 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 பெற்று பயனடைந்து வரும் நிலையில், அத்திட்டத்துக்காக நடப்பாண்டு ரூ.420 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் போல மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் ரூ.1,000 வழங்கும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படவுள்ளது” என்றார்.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. அந்த வகையில், இன்று பேரவையில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும். இதனால், அவர்களின் பெற்றோர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மறுக்கப்படுவதாக கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெற்றாலும், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள், மகளிர் உரிமைத்தொகையும் பெறலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.