சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல், சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று அனைத்து தரப்பு மக்களுமே பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக வலைதளங்களில் இருக்கும் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்களை ஏராளமான மக்கள் பின்தொடர்கின்றனர். இவர்கள் பரிந்துரைக்கும் பொருட்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. மேலும், இவர்கள் சமூக வலைதளங்களின் மூலம் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கமும் அதிகமாக இருக்கிறது.
இதன் காரணமாக, சமூகத்தில் நேர்மறையான மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏற்படுகின்றன. இதனைத் தொடர்ந்து மக்கள் மற்றும் சமூகத்தின் நன்மைக்காக இவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வகுத்து வெளியிட்டு இருக்கிறது. அதில், பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு பொருளையோ அல்லது சேவையையோ ஆதரித்து பேசும் போது பார்வையாளர்கள் வழி தவறி சென்று விடாமல் இருக்கும் வகையில் உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.