நாட்டில் ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் என்னும் மத்திய அரசின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தங்களது வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின்சார அலகுகளை அமைப்பவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். சூரிய சக்தி மின்சாரத்தை தாயரிக்கும் இந்த அலகுகளை அமைக்கும் வீடுகள் ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை மின்சாரத்தை இலவசமாக பெறலாம். ரூ. 75,021 கோடி ஒதுக்கீட்டுடன் கூடிய இந்த லட்சியத் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை பிப்ரவரி 29ம் தேதி ஒப்புதல் வழங்கியுள்ளது.
பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது..?
இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால், 60 சதவீத மானியம் கிடைக்கும். இரண்டு முதல் 3 கிலோ வாட் உற்பத்தித் திறனுக்கு கூடுதலாக 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதிகபட்ச வரம்பு 3 கிலோ வாட் உற்பத்தி திறன் ஆகும். ஒரு கிலோ வாட் அமைப்புக்கு ரூ.30,000 மானியம் கிடைக்கும். இரண்டு கிலோ வாட் அமைப்புக்கு ரூ. 60,000மும், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் அமைக்கப்படும் அலகுக்கு ரூ.78,000மும் மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி என்ன..?
இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும். சூரிய சக்தி தகடுகளை அமைப்பதற்கு ஏற்ற வகையிலான கூரை கொண்ட சொந்த வீடு இருக்கவேண்டும். அந்த வீட்டிற்கு மின்சார இணைப்பு கட்டாயம் இருக்கவேண்டும். வேறு எந்தத் திட்டத்தின் மூலமும் சூரிய சக்தி மின்சாரத்திற்காக மானியம் பெறுபவராக இருக்கக் கூடாது.
இத்திட்டத்தில் எவ்வாறு சேர்வது..?
இந்தத் திட்டத்தில் சேர ஆர்வமுடையவர்கள் www.pmsuryaghar.gov.in. என்ற தேசிய தளத்தில் பதிவு செய்து கொள்ளவேண்டும். மின்சார விநியோகம் செய்யும் நிறுவனம் மற்றும் மாநிலத்தை அதில் குறிப்பிட வேண்டும். இந்தத் தளத்தில், திட்டத்தில் சேர்வதற்கு தேவையான அனைத்து தகவல்களும் கிடைக்கும். மேற்கூரை சூரிய சக்தி தகடுகளை அமைக்கும் நிறுவனங்களையோ அல்லது தனிநபர்களையோ நுகர்வோர் தேர்வு செய்து கொள்ளலாம்.