அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது, இதில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்கு நேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
மொத்தம் 90 நிமிட விவாதம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்ற நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்ட் டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்தனர். 81 வயதாகும் ஜோ பைடன் வயது மூப்பின் காரணமாக சமீப காலங்களாக பொது நிகழ்ச்சிகளில் அவரது பேச்சிலும் நடையிலும் தடுமாற்றம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவின. இந்நிலையில் டிரம்புடன் நடந்த விவாதத்தின்போது, கோவிட் பெருந்தொற்று குறித்து பேசுகையில், ஜோ பைடன் சற்று நேரம் அசைவின்றி ஸ்தம்பித்தார். விவாதத்திலும் ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அவரது குரல் தழுதழுத்திருநத்து. சில சமயம் அவர் என்ன பேசுகிறார் என்றே புரியாத சூழல் நிலவியது. ஜோ பைடனின் இந்த தடுமாற்றம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே பைடன் உடல்நிலை மற்றும் மனநிலை தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதாவது, 81 வயதான பைடனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மட்டுமே நன்றாக வேலை செய்ய முடிவதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த 6 மணி நேரத்தைத் தாண்டினால் அவர் அதீதமாகச் சோர்வடைந்து விடுகிறாராம். அதேபோல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் போதும் அவர் சோர்வடைந்துவிடுவதாகக் கூறப்படுகிறது. இது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
வெள்ளை மாளிகையில் வேலை செய்யும் மற்றும் வேலை செய்த முன்னாள் ஊழியர்கள் பலரும் பைடன் இதுபோல அவ்வப்போது ஃபீரீஸ் ஆகி நின்றுவிடுவார் என்றே கூறுகிறார்கள். அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், பைடனின் உடல்நிலை குறித்து மிகப் பெரியளவில் விவாதம் எழுந்துள்ளது. ஏனென்றால் இந்தாண்டு அவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் அவர் 4 ஆண்டுகள் பதவியில் இருப்பார். அதன்படி பார்த்தால் அவர் 86ஆவது வயது வரை அதிபராக இருப்பார். இப்போதே பைடன் உடல்நிலை மற்றும் மனநலன் இப்போது இப்படி இருக்கும் போது அந்த வயதில் அவரால் நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதே இப்போது பலரது சந்தேகமாக இருக்கிறது.
Read more | குட்நியூஸ்!. ஜூலை 31க்கு பிறகு ஐடிஆர் தாக்கல் செய்தால் அபராதம் இல்லை!