ஜனவரி 1ஆம் தேதி அதிகாலை டெல்லியில் இருசக்கர வாகனம் கார் மீது மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 20 வயது மதிக்கத்தக்க அஞ்சலி என்ற நபர் காரில் சிக்கி பல கிலோ மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயங்களோடு உயிரிழந்தார். அவரது உடலை உடற்கூராய்வு செய்ய டெல்லி மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரிக்கு (எம்ஏஎம்சி) அனுப்பி வைக்கப்பட்டது. அஞ்சலியின் தாயார் தனது மகளின் ஆடைகள் எல்லாம் கிழிந்த நிலையில் இருந்தது. அதனால், பாலியல் பலாத்காரம் செய்திருக்கலாம் என்று சந்தேகித்து காவல்துறையிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து, அஞ்சலியின் உடலை மருத்துவக் குழுவினர் உடற்கூராய்வு செய்தனர். அதன் 8 பக்க அறிக்கையை டெல்லி காவல்துறைக்கு அனுப்பியது. அதில், அஞ்சலியின் உடலில் ஏராளமான காயங்கள் இருப்பதை தெரிவித்தது. ஆனால், அவரது பிறப்புறுப்பில் எந்தவித காயங்களும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MAMC அறிக்கைப்படி, அஞ்சலி சுமார் 10 கிலோமீட்டர் இழுத்துச் செல்லப்பட்டதில் அவருக்கு தலை, முதுகு தண்டு பலமாக அடிபட்டுள்ளது தெரிந்துள்ளது. நீண்ட தூரம் உடல் இழுத்து செல்லப்பட்டதால் சாலையில் தேய்ந்து அவரது மூளை உட்பகுதி, மார்பின் பின்புற விலா எலும்புகள் மற்றும் மார்பு விலா எலும்புகள் அனைத்தும் தேய்ந்துள்ளது. மூளையின் சில பகுதிகளே காணவில்லை என்று மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.

சாலையில் இழுத்துச் சென்ற போது மண்டை ஓடு உரசி தேய்ந்து உள்ளே சில பகுதிகள் காணாமல் சென்றுள்ளது. மண்டை ஓடு திறந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதே போல் முதுகுத்தண்டில் எலும்புகள் தேய்ந்து கூர்மையாக மாறியுள்ளன. மேலும், முதுகுத்தண்டில் இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல் முழுவதும் சேறு மற்றும் அழுக்கு படிந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை, முதுகுத்தண்டு, இடது தொடை, மற்றும் இரு கைகால்களிலும் முன்பொருந்திய காயத்தின் விளைவாக அதிர்ச்சி மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சில காயங்கள் அஞ்சலி இறப்பதற்கு முன்னும், சில காயங்கள் அவர் இறக்கும் போதும், சில காயங்கள் அவர் இறந்த பின்னும் ஏற்பட்டுள்ளது.
சில காயங்கள் ஏற்பட்டு அதன் மீது சேறு, குப்பை படித்ததால் கருமையாக மாறியுள்ளது. அதற்கு அடியில் கூட சில சின்ன சின்ன காயங்கள் இருந்துள்ளன. அனைத்து காயங்களும் கலந்துள்ளன. இந்த காயங்கள் தந்த வலியால் தான் அஞ்சலி இறந்திருக்கக்கூடும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. அவரது மூளைப் பகுதி, மண்டை ஓடு, முதுகுத்தண்டு, கை, கால் என மொத்தம் 40 காயங்கள் இருந்துள்ளதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.